ஈரோடு, ஜூன் 6: கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் (READ) கடந்த 2001ம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்ட அளவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பணி செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, பவானிசாகர், நம்பியூர், டி.என்.பாளையம் ஒன்றியங்களில் உள்ள 40 கிராமங்களில் குழந்தைகள் வளமையம் என்னும் மாலை நேர கல்வி மையத்தை ஏற்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் குழந்தைகள் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த குழந்தைகள் அறிவகங்களில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தை எளிய முறையில் உபகரணங்கள், பாடல்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கற்றுத் தருகிறது.
மேலும் வெறும் பள்ளி படிப்பினை மட்டும் கற்றுத்தராமல் சமூக மனநல பராமரிப்பு, வாழ்க்கைத்திறன் கல்வி, குழந்தைகள் பாராளுமன்றம், தலைமைப்பண்பு களை வளர்க்கிறது. பசுமை மன்றங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு இந்த குழந்தைகள் அறிவகங்கள் சிறப்பாக செயல்பட குழந்தைகள் நலக்குழு, வளரிளம் பெண்கள் குழு, வளரிளம் ஆண்கள் குழு ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகிறது. பெற்றோர் அல்லாத குழந்தைகளுக்கும், நூற்பாலைகளில் பணிபுரியும் குழந்தைகளும் பள்ளிப்படிப்பை தொடர வருடம் தோறும் ஏறத்தாழ 450 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெண் குழந்தைகள் பள்ளி இடைவிலகி குழந்தை தொழிலாளராக நூற்பாலைகளுக்கு செல்வதை தடுக்க அரசு துறைகளுடன் இணைந்து பணியாற்றி, அவர்களுக்கான பாதுகாப்பையும், மறுவாழ்வையும் ரீடு நிறுவனம் உறுதி செய்கிறது.
தமிழக அரசின் உதவியுடன் நடமாடும் மருத்துவ குழு மூலமாக 41 மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு தினந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்குவதுடன் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் படிக்க வசதியில்லாத மற்றும் இடைவிலகிய பெண்குழந்தைகளுக்கு பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது இதில் 50 பெண் குழந்தைகள் அங்கேயே தங்கி பயின்று வருகின்றனர். அரசு நலத்திட்டங்கள், காப்பீடு மற்றும் அனைத்து வசதிகளையும் அந்த பெண் குழந்தைகளுக்கு ரீடு நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது. கொரோனா காலத்தில் 11,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளது. மேலும் ஈரோடு ரயில்வே நிலையத்தில் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை நடத்தி வருகிறது.
இதன் மூலம் சுமார் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும் கடம்பூர், கெத்தேசால் மற்றும் ஆசனூர் ஆகிய கிராமங்களில் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்காக மாலை நேர கல்வி மையங்களை நடத்தி வருகின்றனர்.