திருவண்ணாமலை, மே 18: கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2,18,253 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட சிறப்பான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, சமூக நீதி அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி, கல்வி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தில், முதலாம் வகுப்பு முதல் கல்லூரிகளில் பட்டம் பெறும் வரை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.மேலும், பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பழக்கும் மாணவர்களுக்கு குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் சிறப்பு வழிகாட்டிகளும், கட்டணமில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவராக உருவாக்கவும் மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2021-2022ம் கல்வியாண்டில் 59701 மாணவ மாணவிகளுக்கு ரூ.2.31 கோடி, 2022- 2023 ஆம் கல்வியாண்டில் 54984 மாணவ மாணவிகளுக்கு ரூ.3.89 கோடி, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 54163 மாணவ மாணவிகளுக்கு ரூ.4.02 கோடி, 2024 – 2025ம் கல்வியாண்டில் 49,405 மாணவ மாணவிகளுக்கு ரூ.8.73 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.