கிருஷ்ணகிரி, ஜூலை 9: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, அஞ்சல் துறை மூலம் வங்கி கணக்கு துவங்கவும், ஆதார் எண் இணைக்கவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 2023ம் கல்வியாண்டிற்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை ஆன்லைனில் நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது. மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர்களின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும்.
மேலும், அஞ்சல் துறை மூலமாக வங்கி கணக்கு எண் துவங்கவும், ஆதார் எண் இணைக்கவும், சிறப்பு முகாம் இன்று (9ம் தேதி) கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், தேன்கனிக்ேகாட்டை, ராயக்கோட்டை மற்றும் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, சூளகிரி மற்றும் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அஞ்செட்டி, தளி மற்றும் பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்களில், மாணவர்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து, வங்கி கணக்கு எண் துவங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.