தா.பேட்டை, மே 19:திருமண பெண் அழைப்பிற்கு சென்ற கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. முசிறி அடுத்த நாச்சியார்புதூர் கிராமத்தில் உள்ள சத்யராஜ் என்பவரின் திருமணத்திற்காக வாடகைக்காக கல்லூரி வேன் சென்றதாக தெரிகிறது. அப்போது நாச்சியார்புதூர் கிராமத்தில் இருந்து துறையூர் தாலுகா கண்ணனூர் அடுத்த கெம்பியம்பட்டி கிராமத்தில் பெண் அழைப்பிற்காக கல்லூரி வேன் நேற்று மாலை சென்றது. இந்த வேனில் சுமார் 15 நபர்கள் சென்றனர். துறையூர் தாலுகா ஆங்கியம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் வேனை ஓட்டினார். இந்நிலையில் பண்ணை கொட்டகை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி சுமார் 15 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்தவர்களில் சுமார் 10 பேருக்கு லேசான காயமும், 5 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த ஜானகி, சூர்யா, பொன்வள்ளி, சிவகுரு மற்றும் பலரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்து குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.