புதுச்சேரி, ஏப். 10: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பெரிய முதலியார்சாவடி பாரதி நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் வித்யா (22). இவர் அரியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி வேலுச்சாமி தனது மகளை பார்ப்பதற்காக விடுதிக்கு செல்ல முடிவு செய்து, வித்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த சக மாணவிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 6ம் தேதி வித்யா சான்றிதழ் வாங்கி கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் வித்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.