கிருஷ்ணகிரி, மே 26: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த 20 வயது மாணவி, தர்மபுரி தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால், கிருஷ்ணகிரி திருமலைநகரில் உள்ள தனது அக்கா வீட்டில் மாணவி தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருடன், மாணவி அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை சத்தியராஜ் கடத்தி சென்றதாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில், அவரது அக்கா புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல், கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 முடித்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், குருபரஅள்ளி அருகே ஜிஞ்சுபள்ளியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.