பெரம்பலூர்,மே15: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று (14ம்தேதி) தமிழ் நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு-2025 என்றத் திட்டத்தை தொடங்கி வைத்து, எஸ்எஸ்சி / ஆர்ஆர்பி வங்கித் தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய நிகழ்ச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரலை நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் ேபசியதாவது:
12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களுடன் கூடிய 2025ம் ஆண்டிற்கான கல்லூரிக்கனவு வழிகாட்டு கையேடு தமிழ்நாடு துணை முதலமைச்சரால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் இடம் பெற்றிருப்பதால் மாணவர்கள் கையேட்டினை நன்கு படிக்க வேண்டும். அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, மற்றும் அதிநவீன தொழில்நுட்ப, தொழிற் பயிற்சியுடன் கூடிய தொழிற் கல்வி கற்றுத்தரும் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என உயர்கல்வி பயில்வதற்கான கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந் தோறும் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டும் கல்லூரிக்கனவு திட்டம், வேலைவாய்ப்பிற்கு வழி காட்டும் நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு வசதியாக பெரம்பலூர் நகராட்சியில் அனைத்து வசதியுடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையின் மூலமாக இலவச போட்டித்தேர்வுக்கான பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகிறது.
மேலும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதே, எங்களின், உங்கள் பெற்றோர்களின் எதிர் பார்ப்பாகும். நீங்கள் என்னென்ன படிக்கலாம் எந்தெந்தத் துறையைத் தேர்வு செய்யலாம், என்னென்ன படித்தால் எங்கு வேலை கிடைக்கும் என்பது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூற இருக்கிறார்கள். உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. இந்த நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வரவேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் 12ம் வகுப்பு படிக்கும் போது 50 சதவீதத்துக்கும் குறைவான வருகைப் பதிவு மற்றும் தேர்ச்சி மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் பெற்றோரை இழந்த மாணவ,மாணவிகள், மாற்றுத் திறனுடைய மாணவ,மாணவியர் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில்,திருச்சி என்ஐடிமாணவன் மைந்தன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் அஜய் ஆகியோரது வெற்றிக்கதைகள், உயர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொடர்வதற்கான வழிகள் என்றத்தலைப்பில் பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சப் கலெக்டர் கோகுல், கலெக்ரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள், திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் செல்வம் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதல் நிலை அலுவலர்கள், அரசு மேல் நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.