Tuesday, June 6, 2023
Home » ‘‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’’

‘‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’’

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று. ஆலவாய்த் தெய்வமான சோம சுந்தரக் கடவுள், நேருக்கு நேராகக் கேட்டு மகிழ்ந்த நூல். ‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’ என்றும் ‘கல்லாடம் படித்தவனுடன் மல்லாடாதே’ என்றும் பழமொழிகள் உருவாகக் காரணமான நூல். தமிழின் ஆழத்தை வெளிப்படுத்தியதோடு, போர்களைப் பற்றிய தகவல்களையும் விரிவாகச் சொல்வதால், அந்த பழமொழிகள் உருவாயின.கல்லாடர் பாடிய இந்த நூலைப்பற்றி அறிய வேண்டுமானால், மாணிக்கவாசகரிடம் போகவேண்டும். சிவபெருமானே தேடிப்போய்த் தரிசனம் தந்த மாணிக்கவாசகரை, நாமும் தரிசிக்கலாம் வாருங்கள்! ‘‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக!’’ என்று மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் அருள் ஆணையிட, ‘திருக்கோவை யார்’ எனும் ஒரு அற்புதமான நூலைப் பாடினார் மாணிக்கவாசகர். அவர் பாடப்பாட, அந்த பாடல்களை அப்படியே எழுதினார் சிவபெருமான். ஆம்! சிவபெருமான் அருளாணைப்படி உருவானதோடு மட்டுமல்லாமல், சிவபெருமான் திருக்கரங்களாலேயே தீட்டப்பட்ட நூல் ‘திருக்கோவையார்’. என்னதான் இருந்தாலும், நல்லதற்கு ஆட்கள் இருப்பதைப் போல, கெட்டதற்கும் ஆட்கள் இருப்பார்களே; அதுவும் அடுத்தவர்களைப்பற்றிக் குற்றம் சொல்லாவிட்டால், தூக்கமே வராது என்ற எண்ணம் கொண்டவர்கள், எங்கும் உண்டு; என்றும் உண்டு. அப்படிப்பட்ட சிலர், மாணிக்கவாசகரின் திருக்கோவையார் நூலைக் குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். ‘‘திருக்கோவையார் நூல், முறையில் மாறுபாடாக இருக்கிறது’’ என்று குற்றம் சொன்னார்கள்.கெட்டதற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருக்கும் என்பதற்கு இணங்க, குற்றம் சொன்னவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. இந்த தகவல் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த ‘கல்லாடர்’ என்பவரின் காதுகளில் விழுந்தது. பெரும் புலவரான அவர், வருந்தினார். குற்றம் கூறியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு நூலை எழுதினார். கல்லாடரால் எழுதப்பட்ட அந்த நூலே ‘கல்லாடம்’திருக்கோவையாரின் நூறு பாடல்களைக் குறிக்கோளாகக் கொண்டு, அந்த நூலின் சிறப்பு இயல்களை எடுத்துக் கூறும் விதமாக, தான் எழுதிய கல்லாடம் எனும் அந்த நூலை அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார் கல்லாடர். மதுரையில் அவதரித்த கல்லாடர், முத்தமிழ்ச் சங்கம் உருவான மதுரையிலேயே அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். ஏராளமானோர் கூடியிருந்தார்கள்.அரங்கேற்றம் துவங்கும் நேரம். குற்றம் சொல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள், ‘‘நீங்கள், உங்கள் நூலை அரங்கேற்றம் செய்யும்போது, ஏதாவது புதுமை – அதிசயம் நடந்தாலொழிய, நாங்கள் உங்கள் நூலை ஏற்கமாட்டோம்’’ என்றார்கள். ‘‘சொக்கேசன் அருளால் நல்லதே நடக்கும்’’ என்ற கல்லாடர், கைகளைக்கூப்பி, மதுரை ஈசனை மனமார வேண்டினார். அதேநேரத்தில், சொக்கேசப் பெருமான் ஒரு புலவர் வடிவில் அவைக்கு வந்து அமர்ந்தார். திருநீறு பூசிய திருமேனி, கழுத்தில் ருத்திராட்சமாலை எனக் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய அவரை, அவையில் இருந்தோர் அனைவரும் பார்த்துப் பரவசப் பட்டார்கள். கல்லாடர், தான் எழுதிய நூலில் இருந்து பாடல் களைச் சொல்லி, விளக்கம் சொல்லத் தொடங்கினார்.முதல் பாடல் முடிந்தது. பாடலில் உள்ள பொருட்சுவை – நயங்கள் ஆகியவற்றைத் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்த, புலவர் வடிவில் வந்திருந்த சிவபெருமான், ‘‘ஆகா! ஆகா!’’ என்று வாய்விட்டுப் பாராட்டினார். நூலின் நிறைவுப் பாடலுக்கும் விளக்கம் சொல்லி நிறைவு செய்தார் கல்லாடர். அந்தப் பாடலையும் பாராட்டிய மதுரை ஈசன், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து மறைந்தார்.குற்றம் சொன்ன கும்பல் மட்டுமல்லாமல், அவையில் இருந்த மற்றவர்களும், புலவராக வந்திருந்து தலையசைத்து – வாய்விட்டுச் சொல்லிப் பாராட்டியது, மதுரை சொக்கநாதரே என்பதை உணர்ந்து வியந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது. நாராயணீயம் எனும் நூலைக் குருவாயூரப்பன் தலையசைத்து ஒப்புதல் அளித்ததாகச் சொல்வார்கள். பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதற்கும் வெகுகாலத்திற்கு முன்பே, மதுரை ஈசனே நேருக்கு நேராக வந்து, கேட்டுத் தலையசைத்து, அருந்தமிழ்நூலான கல்லாடத்தை வாய்விட்டுப் பாராட்டிய தகவலும் பரவவில்லை; நூலான கல்லாடமும் பரவவில்லை.கல்லாடரின் கல்லாடம் நூலை, மதுரை ஈசன் மனம் உவந்து பாராட்டியதும், அந்த காலத்திலேயே பதிவாகி உள்ளது.கல்லாடர் செய் பனுவல் கல்லாடம் நூறும் நூல்வல்லார்கள் சங்கத்தில் வந்தருளிச் – சொல் ஆயும்மா மதுரை ஈசர் மனம் உவந்து கேட்டு முடிதாம் அசைத்தார் நூறு தரம்ஆழமான கருத்துக்கள் அடங்கிய அந்தக் கல்லாடத்தில் இருந்து, ஒருசில தகவல்கள், கல்வியைப்பற்றிக் கல்லாடம் மிக விரிவாகக் கூறுகிறது.அறநெறியில் இருந்து சற்றும் அசையாத நிலையைத் தரக் கூடியது. உலகம் முழுவதையும் வசப்படுத்துவது. அறிவையும் பொறுமையையும் தரக்கூடியது. அகலம், நீளம், உயரம் என்ற எல்லைகளைக் கடந்தது, அதாவது, எல்லையில்லாதது. மேரு மலையைப் போன்றது கல்வி. இவ்வாறு, பாடலின் தொடக்கத்தில் கல்வியை, மேருமலையுடன் ஒப்பிட்டுச் சொன்ன கல்லாடர், அடுத்து கல்வியைக் கடலுடன் ஒப்பிட்டுச் சொல்கிறார்.அமுதம் போன்ற இனிமையைத் தரக் கூடியது. செல்வத்தைத் தரக்கூடியது. பல்வேறு துறைகளைக் கொண்டது. கடல் போன்றது. தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காகக் கடலைக் கடைந்தபோது, அமிர்தத்துடன் ஏராளமான செல்வங்களும் வெளிப்பட்டன. அதுபோலத்தான் கல்வியும். எதிர்பார்த்த பலனுடன், எதிர்பாராத செல்வங்களையும் தருவது கல்வி என்கிறார் கல்லாடர். அதுமட்டுமல்ல! கடலில் பல்வேறு துறைகள் இருப்பதைப் போலக் கல்வியிலும் பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஆகையால், கல்வி கடல் போன்றது எனும் கல்லாடரின் வாக்கைப்பார்க்கும் போது, இன்றைய கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள் (கோர்ஸ்) நினைவிற்கு வரும். கல்வியை இவ்வாறு கடலுடன் ஒப்பிட்ட கல்லாடர், அடுத்து கல்வியால் விளையக்கூடிய பலன்களைச் சொல்கிறார்.நடந்ததையும் நடப்பதையும் அவரவர் உள்ளத்தில், அவரவர் அறிவிற்குத் தகுந்தாற்போல, நினைப்பவைகளை அளிப்பதில், தேவலோக விருட்சங்களான சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிஜாதம் என்பவைகளுக்கு இணையானது கல்வி.இப்போதும், இது உண்மை என்பது எளிமையாக விளங்கும். நடந்ததையும் நடப்பதையும் இப்போது, கைபேசியிலேயே அறிந்து, அதற்கு ஏற்றாற்போல், அவரவர் செயல்படுகிறோமே! அது மட்டுமா? கல்வியை, நினைத்ததை எல்லாம் அளிக்கும் கற்பக விருட்சங்களோடு ஒப்பிட்டிருப்பது, அருமை! அருமை! ஏதாவது தேவையாக இருந்தால், கை பேசியிலேயே குறுந்தகவல் அனுப்பி பேசி, நாம் எண்ணியதைப் பெறுகிறோமே! கல்வியின் விளைவு இது.அடுத்து கல்வியைப் பிரம்மதேவருக்கு ஒப்பிடுகிறார் கல்லாடர். அறியாத, அறிய வேண்டிய பொருளை வெளிப்படுத்துவதால், சரஸ்வதி (தெளிவான உள்ளத்தில் வசிப்பவள்) குடியிருப்பதால், இதயமலரில் தங்கியிருப்பதால், பிரம்மதேவருக்குச் சமமானது கல்வி.அடுத்து, கல்வியை, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு இணையாகச் சொல்கிறது கல்லாடம். உயிர்களை விரும்பிக் காப்பதாலும், அறிவை உயர்த்துவதாலும், உலகம் முழுதும் அளந்த திருமாலுக்குச் சமமானது கல்வி. அதே சமயம், கடைசிக் காலத்திலும் நிலைபெற்று இருப்பதாலும், இம்மை – மறுமை எனும் இரண்டையும் தந்து உதவுவதாலும், அம்பிகையை இடப்பாகம் கொண்ட சிவபெருமானுக்கு இணையானது கல்வி. அருள்(நல்)வழி காட்டு வதில், இருவிழிகளுக்கு இணையானது கல்வி. கொடுக்கக்கொடுக்க வளருமே தவிர, ஒருபோதும் கல்வி குறையாது. அதாவது, நாம் கற்றதை அடுத்தவர்க்குச் சொல்லிக் கொடுப்பதால், நாம் கற்ற கல்வி மேன்மேலும் வளருமே தவிர, ஒருபோதும் குறையாது. இதன் காரணமாக அருள் மயமானது கல்வி.இவ்வாறு கல்வியின் பெருமையைப் பல விதங்களிலும் பாடிக்கொண்டு வந்த கல்லாடர், சேரமான் பெருமாள் நாயனார், பாணபத்திரர், பாணபத்திரருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்து அவரைச் சேர மன்னரிடம் அனுப்பிப் பெரும்பொருள் பெறச் செய்த சிவபெருமான் எனப்பாடிப் பாடலை நிறைவு செய்கிறார் கல்லாடர்.அற்புதமான நிறைவு! உலகின் எந்தவொரு பகுதியிலும், எந்தவொரு மொழிக்காகவும், சங்கம் வைத்து, தெய்வங்களே சங்கத் தலைவர்களாக அமர்ந்து, மொழியை வளர்த்ததாக வரலாறு கிடையாது. அந்தப் பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு! சிவபெருமானும் முருகப் பெருமானும் சங்கத்தலைவர்களாக இருந்து, தமிழ் கற்பித்தது நிகழ்ந்த தலம், மதுரை.கற்பித்ததோடு மட்டுமல்ல. தன் முன்னால் நின்று நாள்தோறும் பாடிய பாணபத்திரர் எனும் அடியாரின் வறுமை தீர, அவரிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து, சேரமான் பெருமாள் நாயனாரைப் போய்ப் பார்க்கச் சொன்னார் சிவபெருமான். பாணபத்திரரும் அவ்வாறே செய்ய, இறைவனின் கடிதம் கண்டு மனம் மகிழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார், ஏராளமான பொருளைத் தந்து பாணபத்திரரை வழியனுப்பிவைத்தார்.மதுரையில் நடந்த இந்த நிகழ்வைப் பாடிய கல்லாடரின் பாடல்களுக்கு, மதுரையிலேயே அரங்கேற்றம் நடந்தபோது, சிவபெருமான் நேரில் வந்து அந்த பாடல்களுக்கு ஒப்புதல் அளித்தது, அடியார்களின் பெருமையுடன், கல்வியின் பெருமையையும் விளக்கக்கூடியது.கல்வியின் உயர்வைக் கடவுள்களுக்கு இணையாக வைத்து கல்லாடர் பாடிய அந்தப் பாடல்:நிலையினில் சலியா நிலைமையாலும் பல உலகு எடுத்த ஒரு திறத்தாலும்நிறையும் பொறையும் பெறு நிலையாலும்தேவர் மூவரும் காவலாலும்தமனியப் பராரைச் சைலம் ஆகியும்அளக்க என்று அமையாப் பரப்பினதாலும்அமுதமும் திருவும் உதவுதலாலும்பல துறை முகத்தொடு பயிலுதலாலும் முள் உடைக்கோட்டு முனை எறி சுறவம் அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும்நிறை உளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவைதருதலில் வானத் தரு ஐந்து ஆகியும்மறை வெளிப் படுத்தலில் கலைமகள் இருத்தலில்அக மலர் வாழ்தலில் பிரமன் ஆகியும்உயிர் பரிந்து அளித்தலில் புலமிசை போக்கலில்படி முழுது அளந்த நெடியோன் ஆகியும்இறுதியில் சலியாது இருத்தலாலும்மறுமை தந்து உதவும் இருமையாலும் பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும்அருள் வழி காட்டலில் இரு விழி ஆகியும்கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும் அவை முதலாகி இருவினை கெடுக்கும் புண்ணியக்கல்வி உள் நிகழ் மாக்கள்பரிபுரக் கம்பலை இரு செவி உண்ணும் குடக்கோச் சேரன் கிடைத்து இது காண்க எனமதிமலி புரிசைத் திருமுகம் கூறிஅன்புருத் தரித்த இன்பிசைப் பாணன் பெற நிதி கொடுக்க என உற விடுத்தருளியமாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்இரு சரண் பெறுகுநர் போலப்பெருமதி நீடுவர் சிறுமதி நுதலேஇதைப்போல, நூறு பாடல்கள் கொண்ட அருந்தமிழ் நூல்தான் கல்லாடம்.தொகுப்பு: பி.என்.பரசுராமன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi