திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர் சாமிநாதன் வழக்கில் இருவரை தோகூர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்தவர் அரசங்குடி பருத்திக்கொல்லை தெருவே சேர்ந்த சாமிநாதன் (59). இவர் கல்லணை அருகே கலவை மேடு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டை பையில் இருந்து கிடைத்த கடிதத்தின் பேரிலும், உறவினர்கள் நடராஜபுரம் பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தியதை அடுத்து தோகூர் போலீசார் நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் உர விற்பனையாளர் ராமதாஸ் (47), நகை மதிப்பீட்டாளர் கிருத்திகா (38)ஆகியோரை கைது செய்தனர்.