திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி நேற்று துவங்கியது. கல்பாக்கம் அணு மின் நிலைய வளாகத்தில் சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணு மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றது. இதில், சென்னை அணு மின் நிலையப் பிரிவு கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதில், 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்ற 440 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு தேவைக்கேற்ப மாநில வாரியாக பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது அணு உலை தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், மத்திய தொகுப்பிற்கு கிடைக்கப்பெற வேண்டிய 220 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போனது. இன்று வரை முதலாவது அணு உலையே சரி செய்ய முடியாமல் உள்ள நிலையில், இயங்கி வந்த இரண்டாவது அணு உலையும் கடந்த 21ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், மேலும் 220 மெகா வாட் மின்சாரம் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் குழுவினர் இரண்டாவது அணு உலையின் தொழில்நுட்ப கோளாறை 6 நாட்களுக்கு பிறகு சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்றிலிருந்து இரண்டாவது அணு உலை தனது உற்பத்தியை துவங்கியது. முதல் நாளில் 110 மெகா வாட் மின்சார உற்பத்தியை தொடர்ந்து படிப்படியாக 220 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையை அடையும் என கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்….