செய்யாறு, ஆக.31: செய்யாறு அருகே லோடு ஏற்றச்சென்றபோது கல்குவாரி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஜோலார்பேட்டையை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக பலியானார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தாலுகா, பாய்ச்சல் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(54), லாரி டிரைவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 35 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், டிரைவர் பழனி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்குவாரிக்குள் லோடு ஏற்ற சென்றார். தொடர்ந்து, கருங்கற்களை ஏற்றிக்கொண்டு லாரியானது மேடு பகுதிக்கு வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கல்குவாரி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த பழனியின் மகன் சூர்யா அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.