சாயல்குடி, ஆக.30: பொசுக்குடிபட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான கலை திருவிழா நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் 2024-25 ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத் திருவிழா கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கப்பட்டது. தொடர்ந்து செப்.10ம் தேதி வரை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில் மாணவ,மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, மாறு வேடம், நாட்டுப் புறப்பாடல், பரதநாட்டியம், நடனம், களிமண் பொம்மைகள் செய்தல், மணல் சிற்பம், பலகுரல் பேச்சு, நகைச்சுவை, கதை சொல்லுதல், சிலம்பம் சுற்றுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
நேற்று நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் லதா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சுந்தரி வரவேற்றார். இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.