காஞ்சிபுரம், செப்.16: காஞ்சிபுரத்தில் மகளிர் மற்றும் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு டெபிட் கார்டை முதல்வர் வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமை திட்ட துவக்க விழாவுக்கு காஞ்சிபுரம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ராஜகுளம், பொன்னேரிக்கரை ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலை, தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு அண்ணா நினைவில்லம் சென்ற முதல்வருக்கு வழிநெடுகிலும் பெண்கள் திரளாக நின்று மலர்தூவி வரவேற்றனர்.
அண்ணா நினைவில்லத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, கண்காட்சியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, விழா நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்திற்கு சென்ற முதல்வரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழா மேடைக்கு பார்வையாளர்கள் அரங்கம் வழியாக முதல்வர் சென்றபோது ஆர்வத்துடன் பெண்கள் முதல்வருக்கு கைகுலுக்கி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொடக்க விழாவிற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதல்வரின் கூடுதல் முதன்மை செயலாளர் முருகானந்தம், முதன்மை செயலாளர் அதிகாரி உதயசந்திரன், சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், செல்வபெருந்தகை, ராஜா, கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி, பனையூர் பாபு, பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிமோட் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு பணம் எடுக்கும் ஏடிஎம் அட்டை வழங்கினார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி
னார். இதனை தொடர்ந்து, பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘பிள்ளைகள் திருமணமாகி கைவிட்டு சென்றதால் தவித்து நின்றபோது, ₹1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கியதன் மூலம் எங்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளித்த முதல்வரை மகனாகவே பார்க்கிறேன்’ என்றார். முதல்வர் வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் முதல்வரை வரவேற்கும் பேனர்கள் மற்றும் விழா பந்தல் அருகே வாழைமரம் தோரணம் மற்றும் பிரம்மாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்த மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும், மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சியும் விழா அரங்கம் அருகே அமைக்கப்பட்டிருந்தது.
முதல்வருக்கு நினைவு பரிசு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடி மகளிருக்கு ₹1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாநகருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் 10 ஆயிரம் மகளிர் காஞ்சிபுரம் மாநகர வீதிகளில் வழி நெடுவிலும் நின்று மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், இந்நிகழ்ச்சி நடைபெறும் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரம் இளைஞர்கள் முத்தமிழ் கலைஞர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படத்துடன் உள்ள ஒரே மாதிரியான டி-ஷர்ட் அணிந்து வந்து முதல்வருக்கு கைத்தட்டி ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலைஞரின் உருவ சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்ட முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் கண்ணன், துணை மேயர் குமரகுருநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக், விஸ்வநாதன், மல்லிகா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, அண்ணா இல்லத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்த பார்வையாளர் பதிவேட்டில், அண்ணா பிறந்தநாள் அன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ நன்றி என்று எழுதி கையொப்பமிட்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பொன்னி, போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல்வர் வரும் பாதை மற்றும் மாநகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், நேற்று அதிகாலை முதல் காஞ்சிபுரம் மாநகர் பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாற்று வழியாக களியனூர், வழியாகயும், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒலிமுகமது பேட்டை வழியாக வந்தவாசி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிற்ப கலைஞர் அசத்தல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைக்கும் விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தொடக்க விழா பந்தல் அருகே, அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படத்தை 15 டன் மணலில் சென்னையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் கஜேந்திரன் வடிவமைத்து அசத்தியுள்ளார். தொடக்க விழாவிற்காக காஞ்சிபுரத்திற்கு வருகை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பங்கள் பயனாளிகளின் கவனத்தை ஈர்த்தது என்பதில் ஐயமில்லை.