சேலம், ஆக.6: சேலம் மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 4.02 லட்சம் பெண்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப். 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்ப பதிவு நடந்து வந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்ட முகாமில், 4.02 லட்சம் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவு பணியில் 1,614 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நகரப்பகுதிகளில் உள்ள 2.52 லட்சம் கார்டுகளும், கிராமப்புறங்களில் உள்ள 3.47 லட்சம் ரேசன் கார்டுகளைச் சேர்ந்த குடும்பங்களும் என இந்த முதற்கட்ட முகாமில் மொத்தம் 6 லட்சம் கார்டுதாரர்கள் விண்ணப்பப்பதிவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், 4,02,657 பேர் மட்டுமே தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவற்றில் நகர்ப்புறங்களில் 1.47 லட்சம் பேரும், கிராமப்புறங்களில் 2.54 லட்சம் பேரும் அடங்குவர். முதற்கட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், கிராமப்புறத்திலிருந்து 73.27 சதவீதம் பேரும், நகர்ப்புறத்திலிருந்து 58.58 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகள் மற்றும் தாலுகா, வருவாய் கிராமம் வாரியாக ஏற்கனவே முதற்கட்ட முகாம் நடந்த இடங்களை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் 16ம் ேததி வரை இரண்டாம் கட்ட முகாம் நடக்கிறது. விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வரும் பெண்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் வழியாக ஓடிபி பெறப்படும். எனவே, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனை முகாமிற்கு எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேசன் கடை அமைந்திருக்கும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண், குடும்பத் தலைவியாகக் கருதப்படுவர். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
அதேசமயம், மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவர். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று முகாமிற்கு உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0427 2452202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.