நாமக்கல், ஆக.30: நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நாமக்கல் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதாக ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.
நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், ₹20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல, முதலைப்பட்டியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம், ₹25 கோடி மதிப்பில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தின் மொத்த பரப்பளவு 12.89 ஏக்கர். இதில் 10 ஏக்கரில் தற்போது பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 7 பயணியர் காத்திருப்பு பகுதி, 2 ஏடிஎம் சென்டர்கள், 200 டூவீலர்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி, புறக்காவல் நிலையம், அலுவலகம் போன்ற வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள்ளது. அடுத்த மாதம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதன்முதலில் நாமக்கல் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது புதிய பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில், புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு டாக்டர். கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் பலரும், வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் தாலுகாவில் 884 ஹெக்டேரில் சிப்காட் அமைய உள்ளது. அதற்கு நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிப்காட் திட்டதிற்கான பணிகளை மேற்கொள்ள, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எந்த வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பாலை, ஆவின் கொள்முதல் செய்து வருகிறது. நாமக்கல்லில் அதிநவீன பால்பண்ணை, கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் ₹100 கோடி மதிப்பில் அமைகிறது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் நாமக்கல் வந்து, பால் பண்ணை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். சேலம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழுவின் பதவி காலத்தை, மேலும் 6 மாதம் நீடித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கூட்டுறவு வங்கி துவங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறும் பணி நடந்து வருகிறது. அதற்கு முன்பு, இரண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் பேரவை கூட்டம் நடத்தவேண்டும். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. நாமக்கல் நகரில் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், மத்திய கூட்டுறவு வங்கி துவக்க விழா மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழாக்கள் நடைபெறும்.
நாமக்கல் மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இதுவரை 16 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கபட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் 500 பேருக்கு வழங்கப்பட உள்ளது. ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில், இந்த பணிகள் முடிக்கப்படும். இதே போல எருமப்பட்டி – சேந்தமங்கலம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் விரைவாக தொடங்கப்படும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.