மதுரை, ஜூலை 29: மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொருளாளர் அனந்தராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் கார்மேகம், மாநில துணை செயலாளர் நாகசுப்பிரமணியன், மாநில துணை தலைவர் சின்னத்துரை, கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரையில் கலைஞர் நூலகத்தை திறந்து தென்மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவு புரட்சியை கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைமையாசிரியர் சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறது. தொடர்ந்து கூட்டத்தில், உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய விலையில்லா புத்தகங்கள், நோட்டுகளை பள்ளியிலேயே கொண்டு வந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவி பெறும் பள்ளிகளின் தபால்களை (கோப்பு) மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்தில் தேக்க நிலை அடைந்து உள்ளது. சிறப்பு முகாம் நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்களின் சரண்டரை உடனே விடுவிக்க வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.