காஞ்சிபுரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடப்பதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அக்குழுக்களில் ஒன்றான ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ என்ற குழு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள்/கல்லூரிகளில் (ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகள் என்ற வகையில்) “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித்துள்ளது.
அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. துணைக் குழுவானது, சட்டமன்ற பேரவை உயர் அலுவலர்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை நாளை (21ம் தேதி) நடத்துவதென முடிவெடுத்துள்ளது. இக்கருத்தரங்கு நாளை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம், ஆன்டர்சன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12 மணியளவில், காஞ்சிபுரம், எஸ்எஸ்கேவி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.