திருப்புத்தூர், ஆக.28: திருப்புத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில், அகில இந்திய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. திருப்புத்தூரில் அகில இந்திய அளவிலான மகளிர் கபடிப் போட்டி, கபடி குழுக்கள் பங்கு கொண்ட அணிவகுப்பு நான்கு ரோட்டில் துவங்கி மதுரை ரோடு வழியாக கபடித் திடலை அடைந்தது. இப்போட்டியில் மகாராஷ்டிரா, ஹரியானா, மேற்குவங்காளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 19 அணிகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பை, 2ம் இடத்திற்கு 1.5 லட்சமும், 3ம் இடத்திற்கு ரூ.1 லட்சமும், 4ம் இடத்திற்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், திருப்புத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலாராணி நாராயணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிமுத்து செய்து வருகிறார்.