பெரியகுளம், ஆக. 20: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் மற்றும் ஆலோசனை வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல் , மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் செயல்படுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் , பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ச்சுனன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.