ராமநாதபுரம், செப். 2: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சார்பில் 6ம் முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண்பிரசாத் தலைமை வகித்தார். அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிகள் வனிதா, லோகதர்ஷினி ஆகியோர் முதலிடத்தையும், செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் செல்வக்குமார், முகம்மது ஹசன் கனி ஆகியோர் இரண்டாம் இடத்தையும், ராஜா மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் பெரியார் செல்வன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.