திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளை தாமதமின்றி கட்டி முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான பழுதுபார்க்கும் பணிகளையும் விரைந்து முடித்து அதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்திய தாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.