அணைக்கட்டு, ஜூன் 19: அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம், வெண்கல சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் தளத்தில் போர்டிகோ பகுதியில் கலைஞரின் வெண்கல சிலை அமைப்பதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் கலைஞர் அறிவாலயம் அமைக்கும் பணி, கலைஞர் வெண்கல சிலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு செய்தார். கட்டிடத்திற்குள்ளே சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, திமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமரபாண்டியன், ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள், திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.