சின்னமனூர், அக். 4: தமிழகத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் விவசாயத்திற்கான முன்னோடி திட்டத்தை கலைஞரின் அனைத்து வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சின்னமனூர் பகுதிகளில் உள்ள 14 கிராம ஊராட்சிகளில் அந்த திட்டத்தை துவக்குவதற்காக தரிசு நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அதன்பேரில், புலிகுத்தி, சின்னஒவுலாபுரம் ஆகிய கிராமங்கள் சின்னமனூர் வேளாண்மை மற்றும் தோட்டகலை துறையினரால் தேர்வு செய்யப்பட்டது. சின்னஓவுலாபுரத்தில் 6 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்து அங்கு போர்வெல் அமைத்து மின்மோட்டார் அமைத்துக் கொடுக்கப்பட்டு விவசாயம் நடந்து வருகிறது.
அதனடிப்படையில் நேற்று கலைஞரின் அனைத்து வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் சரியாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி, தோட்டகலை உதவி இயக்குநர் சந்திரசேகர் ஆகிய இருவரிடமும் கேட்டறிந்தார். அப்போது சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாத்துரை, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, தெற்கு மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் செந்தில்குமார், வேளாண்மை மற்றும் தோட்டகலை துறை அதிகாரிகள் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.