மதுரை, ஜூன் 26:மதுரை கலெக்டராக இருந்த சங்கீதா, சமூக நலத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் ெசய்யப்பட்டார். இதையடுத்து மதுரை கலெக்டராக, பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் (மத்தி) கே.ஜே.பிரவீன்குமார், நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டராக பிரவீன்குமார், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 9.6.2023 முதல் 18.10.2023 வரை மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் உதவி செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2021ம் ஆண்டில் திமுக அரசால் துவக்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.