நாகப்பட்டினம், ஜூலை 1: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த புலவநல்லூரைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் நேற்று நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் ஊரில் மங்கள மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவின்போது கடந்த மே மாதம் 29ம் தேதி சாமி ஊர்வலம் நடைப்பெற்றது. அப்போது ஒவ்வொரு தெருவிற்கும் சாமி வீதிஉலா போகும்போது வீடுகளுக்கு முன்பும் சாமியை நிறுத்தி அர்ச்சனை செய்து குடும்பத்தினர் வழிபடுவர். ஆனால் எங்கள் குடும்பத்தினர் வரி கட்டவில்லை எனக்கூறி எங்கள் வீட்டின் முன்பு சாமியை நிறுத்தாமலும் அர்ச்சனை செய்ய கூடாது எனவும் கூறி விழா குழுவினர் வீட்டை ஒதுக்கிவைத்து சாமியை தூக்கி சென்றனர். இதனால் எங்கள் குடும்பம் மன உளைச்சல் அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் கோவில் திருவிழாவின் போது எங்கள் வீட்டின் முன்பு வழக்கம் போல சாமி வரவேண்டும். வழிபட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.