அறந்தாங்கி: அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு பேருந்து பணிமனையில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்தூர், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு பின் பகுதியில் உள்ள கடைகளில் பொருள் வாங்கி கொண்டு மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்க்கு வரும் முன் செல்ல வேண்டிய பேருந்து சென்று விடுகிறது என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த அளவிற்க்கு பஸ் ஸ்டாண்டிற்கு பின் செல்லும் வழியில் பொதுமக்கள், பயணிகள் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு மற்றும் கடைகள் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை தாண்டி வேகமாக வரவும் முடியாது. போகவும் முடியாத நிலையில் வழி முழுவதும் பொருள்களை போட்டு அடைத்து வைத்துள்ளனர். இதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதையில் நின்று கொண்டு சிகரட் குடித்து கொண்டு புகை விடுகின்றனர்.