மயிலாடுதுறை, ஜூலை 7: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.தீண்டாமையை விட்டொழித்து பொது மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அக்கிராமத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதேபோல் சாதி வேறுபாடுகளற்ற சமத்துவ மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் ஒரு மாவட்டத்திற்கு 3 சிற்றூர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.மேலும் ஆயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 4 வட்டங்களில் உள்ள கிராமப்புற ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு 24 பணிகள் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மணல்மேடு,வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 2 பேரூராட்சிகளில் நகர்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு 2 பணிகள்; ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம்,பிரதம மந்திரியின் ஆதிதிராவிடா மக்கள் முன்னேற்ற திட்டம்,பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டம்,விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்,கல்வி உதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். முன்னதாக சாதி வன்கொடுமை வழக்குகளில் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன்,காவல் துறையினர்,கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.