தஞ்சாவூர், செப். 6: ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஒவ்வொரு ஆண்டும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவருடைய பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை போற்றும்வகையில், தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொருவரும் தங்ளுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, நினைவு பரிசும் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று. தஞ்சையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகளை மலர்தூவி வரவேற்றதோடு, பேனா, ரோஜாப்பூ உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.
தஞ்சை தென்கீழ் அலங்கம் பகுதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் உள்பட 17 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். இந்த பள்ளிக்கு வழக்கம் போல் நேற்று ஆசிரியர்கள் வந்தனர். அப்போது மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆசிரியர் தினத்தையொட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் ரோஜாப்பூக்களை தூவி வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு நெற்றில் திலகமிட்டு வரவேற்று ரோஜாப்பூக்களையும் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.