முத்துப்பேட்டை,செப். 6: முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட கொய்யா தோப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். கோறையாற்றில் சாக்கடை கலக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் பணி மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர தலைவர் வழக்கறிஞர் ராஜ்முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.