நாமக்கல், மே 27: ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(37). இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை அழைத்து போலீசார் பேசினர். அப்போது, அவர் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்வியல் கல்லுரியில் கடந்த 2017ம் ஆண்டு படித்தேன். அதற்கு கல்வி கட்டணமாக ரூ.80 ஆயிரம் செலுத்தினேன். படிப்பு முடிந்த பின்பு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பி.எட்., சான்றிதழ், சாதி சான்று ஆகியவற்றை கல்வி நிறுவனம் தர மறுத்து ரூ.80 ஆயிரம் கேட்கின்றனர் என தெரிவித்தார். சான்றிதழகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரிக்க பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதி கூறினர். மேலும், முறைப்படி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.