விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நேற்றும் முயற்சித்த நிலையில், சில சங்கங்கள் நேற்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையாணை பெற்றதால் கடைகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வணிக ரீதியாக நடத்தப்படும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கடைகளை அகற்ற கடந்த மே 16 மற்றும் மே 27 தேதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு அகற்றப்படும் என இறுதி நோட்டீஸ் வழங்கி, அகற்ற நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடைகளை நடத்தும் சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அகற்றும் பணிபாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை, பொதுப்பணித்துறையினர் கடைகளை அகற்ற வந்தனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்க நிர்வாகிகள் கடைகளை அகற்ற விடாமல் தடுத்ததை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். வருவாய்த்துறை சங்கம், போலீஸ் அமைச்சு பணியாளர்கள் சங்கம் உள்ளபட 4 சங்கங்கள் நேற்று உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து மற்ற சங்கங்களை போல இடைக்கால தடையாணை பெற்றனர். இதை தொடர்ந்து கடைகள் அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.