ஊட்டி, செப்.5: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சாலை, குடிநீர், வீட்டுமனை பட்டா, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து சுமார் 129 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீதும் அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.