மதுரை, ஜூன் 4: மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டம் கல்லூரிக் கனவு 2025-ன் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2024-25 ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வி பயிலுதல் மற்றும் துணைத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்கள் நேரடியாக உயர் கல்வியில் சேர்த்தல், உயர்கல்வி படிப்பிற்கு கல்வி உதவித் தொகை பெற வழிகாட்டுதல் மற்றும் மாணவர்கள் கல்விநலன் கருதி அவர்களது பிற கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்பெறும் நோக்கில் கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேராத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாமல் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை மையப்படுத்தியும் இம்மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையிலும் உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை தேவைப்படும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும் நாளை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.