ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட, பழைய பயன்பாடற்ற பொருட்களை தரம் பிரித்தல் நிகழ்வினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலியில் பார்வையிட்டார். அப்போது மக்கும் பொருள், மக்காக பொருட்கள், மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், காகித கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு துணை முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசும் போது, ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் இயற்கையை காப்பாற்ற தேவைப்படும். நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகின்றது.
பெருகி வரும் மக்கள் தொகையாலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் கழிவுகள் மற்றும் நச்சுப்புகைகள் காற்றுமண்டலத்தில் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்கின்றன. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மரத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும் என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுபோன்று ராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி, மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்து பணியை துவக்கி வைத்தார்.
பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பத்மா, ஸ்ரீமதி, ஆயிசா மற்றும் பச்சை குடை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அரச மரக்கன்றை மாணவர்கள் நட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கும் வகையிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் செய்திருந்தார்.