கரூர், ஜூன் 5: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டுதுறை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் 2024-25ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள வசதியாக, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம் அறை எண் 85ல் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டுதுறைஅமைக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள், மருத்துவ படிப்பு, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த படிப்புகள், பல்வகை தொழில் நுட்ப படிப்புகள், தொழிற்பயிற்சி மையப் படிப்புகள், ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சார்ந்த கல்லூரிகளில் உயர்கல்வி சேர்க்கை தொடர்பாகவும், உயர்கல்வி பயில நிதி உதவி கோருதல் சம்பந்தமாகவும், கல்விக் கடன் வழங்குதல் தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரிலோ அல்லது 95665 66727 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.