சிவகங்கை, செப். 4: இளையான்குடி அருகே அரசு பஸ்சை முந்தைய வழித்தடத்திலேயே இயக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. காளையார்கோவில் ஒன்றியம் கோளாந்தி கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து இளையான்குடி, தாயனூர், கோளாந்தி, சேத்தூர், சூராணம் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தாயனூர் மற்றும் கோளாந்தி வழியாக செல்வது நிறுத்தப்பட்டு நேரடியாக சேத்தூர் செல்கிறது. மேலச்சேத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பஸ் தாயனூர், கோளாந்தி வழியாக செல்லாததால் இந்த இரண்டு கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ்சை தாயனூர், கோளாந்தி வழியாக முந்தைய வழித்தடத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.