கலசபாக்கம், மே 31: கலசபாக்கம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 523 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். கலசபாக்கம் ஒன்றியம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராம் பிரதீபன் முன்னிலை வகித்தார். தாசில்தார் தேன்மொழி வரவேற்றார். கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு 523 பேருக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
கலசபாக்கம் தொகுதியில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தென் மகாதேவ மங்கலம் கோயில் மாதிமங்கலம் தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் விதத்தில் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பயன்பெறுவதற்காக சிறப்பு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
அதன்படி உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத் துறை திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைந்த மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்க முதலமைச்சர் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், சிறுதானிய இயக்க திட்டம் போன்ற திட்டங்கள் உழவரைத் தேடி உழவர் நலத்துறை என்னும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது துறைவாரியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகாரிகளை தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களை தேடி அதிகாரிகள் சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் பேசியதாவது:
கலசபாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் 4 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகால கோரிக்கைகள் திராவிட மாடல் ஆட்சியில் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கிராமங்கள் தோறும் வந்து கேட்க உள்ளேன் என்றார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு தாசில்தார் லலிதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், பிடிஓக்கள் பாலமுருகன் அண்ணாமலை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.