கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் ‘‘ஒளிரும் தமிழ்நாடு”, மிளிரும் தமிழர்கள்” என்ற கருத்தரங்கம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ‘‘ஒளிரும் தமிழ்நாடு” ‘‘மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், கருத்தரங்கு தலைப்பில் சந்திரயான் திட்டங்கள் குறித்தும் தமிழ்நாட்டில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாடு விஞ்ஞானிகள் சர்.சிவி ராமன், சந்திரசேகரன், வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசு பெற்றதை விளக்கி காட்டினார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்ச்சாமி அண்ணத்துரை, இஸ்ரே முன்னாள் இயக்குனர் சிவன் மற்றும் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அதேபோல மங்கனூரை சேர்ந்த மாணவர்களாகிய நீங்களும் நாளை இதே போன்று விஞ்ஞானியாக, மாவட்ட கலெக்டராக, அரசியல் தலைவர்களாக, அரசு அலுவலர் களாக உருவாக வேண்டும் என்று பேசினார்.