பெரும்புதூர், ஜூன் 10: சுங்குவார்சத்திரம் அருகே கர்ப்பிணி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் கருவை கலைக்க மறுத்ததால் உறவுக்கார கள்ளக்காதலனே அவரை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவருக்கு தேவி (34) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். முருகன் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். தேவி திருமங்கலம் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் எம்பிராய்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற தேவி வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். இந்நிலையில், திருமங்கலம் பள்ளத் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அப்பகுதி மக்கள் சரிசெய்தபோது கால்வாயில் ஒரு இளம்பெண் நிர்வான நிலையில் கால்கள் கட்டபட்ட நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கபட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கபட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் ஸ்லாப் மூடியை உடைத்து சடலத்தை மீட்டனர். பின்னர் முருகனுக்கு தகவல் கொடுக்கபட்டு அவர் அங்கு வரவழைக்கப்பார். சம்பவ இடத்திற்கு வந்த முருகன், இறந்தது தனது மனைவி தேவி என்பதை உறுதி செய்தார். மேலும் தேவியில் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் தேவி அடித்துக் கொலை செய்யபட்டு, கால்வாயில் சடலம் வீசப்பட்டது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவி (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரவிதான் தேவியை கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. தேவியும், ரவியும் உறவினர்கள் ஆவர். எனவே இருவரும் எதிரெதிரே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரவியும், தேவியும் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் தேவி கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த தேவியை, கருவை கலைத்துவிடுமாறு ரவி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தேவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தேவி வேலை முடிந்து வீட்டிற்கு பள்ளித்தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ரவி, தேவியை வழிமறித்து ‘‘ஓரிரு நாளில் நீ கர்ப்பத்தை கலைக்க வேண்டும், இல்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது’’ என்று மிரட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவி, தேவியின் தலையை பிடித்து அங்கிருந்த சுவரில் தள்ளி முட்ட வைத்துள்ளார்.
இதில் தேவி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். பின்னர் தேவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து ரவி தனது பையில் வைத்துக்கொண்ட்டார். மேலும் புடவையை கழற்றி கால்களை புடவையால் கட்டி, தேவியின் சடலத்தை ரவி கால்வாயில் வீசிச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கர்ப்பிணியை வாலிபர் அடித்துக் கொன்ற இந்த சம்பவம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.