வேலூர், நவ.2: திருப்பதியில் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊரான பழனிக்கு கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு காட்பாடியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த பெருளூரை சேர்ந்தவர் கல்பனா(25). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று டெல்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் மீண்டும் சொந்த ஊருக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இந்த ரயில் நேற்று மதியம் 12 மணியளவில் சித்தூர் ரயில் நிலையம் தாண்டி வரும்போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்த தகவல் உடனடியாக ரயிலின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கு ரயில் பெட்டியிலேயே கல்பனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அங்கு மருத்துவக்குழுவினருடன் தயார் நிலையில் இருந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தாயும், சேயும் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.