புதுச்சேரி, ஜூன் 4: கர்ப்பப்பை, சிறுநீர் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு, போன்ற நோய்களால் இந்தியாவில் 5 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நோய்களுக்கு தீர்வு காண, பெல்விக் ப்ளோர் சப்போர்ட் மெஷ்கள் எனப்படும் உயிரியல் மெஷ்களை கண்டுபிடித்து காரைக்கால் மாணவி உலக சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி அருள்முருகன். மும்பையில் ஐஐடி ஆராய்ச்சி படித்த இவர் தனது மருத்துவ ஆராய்ச்சி மூலம் இடுப்பு உறுப்பு சரிவு, போன்ற பெண்களுக்கான நோய்களை சரி செய்வதற்கு பெல்விக் ப்ளோர் சப்போர்ட் மெஷ்கள் எனப்படும் உயிரியல் மெஷ்களை கண்டுபிடித்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளார். இவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு ரூ.1 கோடி கொடுத்து அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரி வருகை புரிந்த பிரீத்தி அருள்முருகன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோரை சட்டப்பேரவையில் சந்தித்து தனது மருத்துவ சாதனைகளை எடுத்துக் கூறி வாழ்த்து பெற்றார். இதுகுறித்து சபாநாயகர் கூறுகையில், புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் படித்த இவர் ஐஐடி மும்பையில் மேல் படிப்பு முடித்து மருத்துவ உலகில் அரிய வகை நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார். இது புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இவரது கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசும் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக புதுச்சேரி மகளிர் தினவிழாவில் ப்ரீத்திக்கு விருது வழங்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் பத்ம விருதுக்கு பரிந்துரை செய்வோம், என்றார்.
பிரீத்தி அருள்முருகன் கூறுகையில், ‘இந்தியாவில் 30 சதவீதம் மாதவிடாய் நின்ற பெண்கள் இடுப்புத் தள தசைகளில் ஏற்படும் பலவீனம் காரணமாக மன அழுத்த சிறுநீர் அடங்காமை மற்றும் இடுப்பு உறுப்பு சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களால் இந்தியாவில் 5 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புகளுக்கு தற்போதைய அறுவை சிச்சையில் பிளாஸ்டிக் பொருள் போன்ற வலை பயன்படுத்தப்பட்டுகிறது.
தற்போது நான் கண்டுபிடித்துள்ள சாப்ட் பைப் ரோசிஸ் என்ற வேதியியல் மூலக்கூறுகள் மனித திசுக்களோடு ஒன்றாகிவிடும். ஒரு லேயராக இருந்து இடுப்பு உறுப்புகளை அவற்றின் உடற்கூறியல் நிலையில் வைத்திருக்க அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது. எனது கண்டுபிடிப்பு உயிரியல் ரீதியாக இணக்கமானது, மென்மையான பைப்ரோசிசை ஊக்குவிக்கிறது. அடுத்த கட்டமாக இச்சோதனை மனிதர்களிடம் மேற்கொள்ள இருக்கிறோம். இதற்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது என்றார்.