ஈரோடு, அக். 6: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார். நீர் உரிமை சட்டப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்குள் மக்கள் பிரச்னையை தீர்க்காமல், மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசும், கர்நாடகா அரசும் செயல்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், சுந்தர்ராஜன், தங்கதுரை, பாலகிருஷ்ணன், ராஜா, ஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.