கரூர், செப். 20: மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து அந்த பகுதிகளை குளிர்வித்துவருகிறது. ஆனால், வழக்கமாக இந்த சமயங்களில் கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், அதற்கு மாறாக, கடந்த 2 மாதங்களாக கோடைக்கு நிகராக வெயில் வாட்டி வதக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், கருர் மாவட்டத்திலும் மழை பெய்யும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், மழைக்கு பதிலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 128.20 மிமீ மழை பெய்திருந்தது. இதனைத் தடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கரூர் 1.4 மிமீ, குளித்தலை 4 மிமீ, தோகைமலை 8 மிமீ, கிருஷ்ணராயபுரம் 2 மிமீ, மாயனூர் 2 மிமீ, பஞ்சப்பட்டி 2 மிமீ, கடவூர் 5 மிமீ, பாலவிடுதி 22.2 மிமீ, மயிலம்பட்டி 26 மிமீ என மாவட்டம் முழுதும் 72.60 மிமீ மழை பெய்திருந்தது. இதன் சராசரி 6.05 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.