கரூர், நவ. 22: கரூர் மாநகர பகுதிகளில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டில் விளைவு குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கரூர் மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த நிலையில் உள்ளது. டாஸ்மாக் பாரில் ஆரம்பித்து, சிறிய பெட்டிக்கடை, மீன், சிக்கன் கடை போன்ற அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அனைத்தும் தெருக்களில் வீசி செல்வதால், காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் இடம் பெயர்ந்து மண்ணில் மக்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒட்டியுள்ள உணவுகளை சாப்பிடும் போது, பிளாஸ்டிக்கும் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து துறைகளின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், அடிக்கடி சோதனை நடத்தி, அபராதம் விதிக்கப்பட்டாலும் ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் அகற்றி, இதன் பயன்பாடு குறித்தான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.