கரூர், ஜூலை 6:கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பில் புதிய நீச்சல்குளம் அமைக்கும் பணியை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்அடிப்படையில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருவதுடன் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனை நிகழ்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நீச்சல் திறமை வளர்த்து கொள்வதற்கும், நீச்சல் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வகையில் ரூபாய் 1.69 கோடி மதிப்பில்நிதி ஒதுக்கப்பட்டு 25 மீட்டர் நீளமும்,17 மீட்டர் அகலமும் கொண்ட நவீன நீச்சல்குளம் மாணவர்களின் பயன்பாட்டிற்கும்,நீச்சல் பயிற்சி பெறும் வீரர்களுக்கும் பயன்படுத்துவதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூமிபூஜை செய்து பணிகள் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக செயலாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நீச்சல்குளம் அமைப்பதற்கான பணியை காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகராட்சி சார்பில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.