கரூர், செப். 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகர் சந்திப்பில் நிழற்குடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, திருச்சி பைபாஸ் சாலை, மதுரை பைபாஸ் சாலை, திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், அரவக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் பொன்நகர் வழியாக சென்று வருகிறது. இந்த பொன்நகர் சந்திப்பு பகுதியில் இருந்து தாந்தோணிமலை, கரூர், ஒத்தையூர் போன்ற பகுதிகளுக்கான சாலைகளும் பிரிந்து செல்கிறது.
இந்த சந்திப்பு வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு சென்று வருகிறது. எனவே, இந்த பொன்நகர் சந்திப்பில் பயணிகளும், மாணவ, மாணவிகளும் நின்று செல்லும் வகையில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொன்நகர் சந்திப்பு பகுதியை பார்வையிட்டு, அனைவரின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.