கரூர், செப். 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை களை கட்டி வருகிறது. செப்டம்பர் 7ம்தேதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளன. 7ம்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜர்சன ஊர்வலம் நடத்தப்படவுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டும் ஏராளமானோர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு கருர் சன்னதி தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் பல்வேறு வர்ணங்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களால் வாங்கிச் செல்லப்படும் சிலைகள் அனைத்தும் செப்டம்பர் 7ம்தேதி முதல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.