வேலாயுதம்பாளையம், நவ. 27: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் சமுதாய கூடத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சீர்மரபினர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமார் தலைமை வகிக்கிறார். உதவியாளர் கார்த்தி மற்றும் குழுவினரிடம் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை பூர்த்தி செய்து படிவத்துடன் குடும்ப தலைவரின் ஆதார்டு கார்டு நகல், குடும்ப அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல் (குடும்பத்தில் யாரோ ஒருவருடையது), விண்ணப்பதாரரின் புகைப்படம் 3 காப்பி ஆகியவற்றை இணைத்து கொடுத்தனர்.
முகாமினை தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் பசுவை சக்திவேல், ராஜ் கவுண்டர், கரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வளர்மதி சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டனர். முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் வேட்டமங்கலம் கிழக்கு, வேட்டமங்கலம் மேற்கு, கோப்புப் பாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 130 பெண்களும், 50 ஆண்களும் என 180 பேர் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளது.