கரூர், செப்.1: கரூரில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், ஆடு வளர்ப்பு தொழிலில் விவசாயகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உரங்கள் விலை உயர்வு, மழை குறைவு, விற்பனை விலை குறைவு, கூலி ஆள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாகவும், மனைகளாகவும் மாறிவருகின்றன. இதனால், மனிதர்களின் உணவுத் தேவையை கடல் உணவும், ஆடு, மாடு, கோழி, காடை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் தன்னிறைவு செய்கின்றன. இதனால், விவசாத் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டபோது, ஆடு, மாடு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது.
ஆனால், நாளடைவில் ஆடு மாடு வளர்ப்புக்கு கால்நடைப் பல்கலைக் கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம், அரசின் கால்நடைத் துறை மூலம் கால்நடை வளர்ப்பு பயிற்சி, அரசு மானியத்திட்டங்கள், இறைச்சி விலை உயர்வு போன்றவற்றால் படித்தவர்கள் கூட பண்ணை ஆடு, மாடு வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், கரூர் மாவட்டத்தில் வளர்க்கப்படும் வெள்ளை ஆடு, செம்மறி ஆடுகள் சேலம், கோவை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்க விவசாயிகள் மட்டுமின்றி, பட்டதாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.