தோகைமலை, அக். 17: கரூர் அருகே குளத்தின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள அரசகவுண்டனூரில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவிலான செம்போடை குளம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் செம்பியநத்தம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் செம்போடை குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதற்கிடையே கடவூர் மலை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.
இதனால் செம்போடை குளத்துக்கு மழைநீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து குளத்தின் முழு கொள்ளளவான 20 அடியை தாண்டி தண்ணீர் நிரம்பியது. மேலும் தண்ணீர் வரத்து குறையாததால குளத்தின் கரையில் 20 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு வயல்களை தண்ணீர் மூழ்கடித்தது. மேலும் அரசகவுண்டனூர் ஊருக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இதையடுத்து செம்பியநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, செயலாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கரை உடைப்பை தற்காலிகமாக சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது போல மீண்டும் கரை உடைப்பு ஏற்படாமல் தடுக்க குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செம்போடை குளம் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.